இந்த நாவு இருக்கிறதே நாவு

இந்த நாவு இருக்கிறதே நாவு, Youth Ceylon


ஆரோக்கியம் மனித நாக்கு என்பது சுவை, பேச்சு, மெல்லுதல், விழுங்குதல் ஆகியவற்றுக்கு அவசியமான சக்திவாய்ந்த தசை உறுப்பாகும். அதன் மேற்பரப்பு உணவின் சுவை, தன்மை ஆகியவற்றை வேறுபடுத்தி அறிய உதவும் வகையில் மூடப்பட்டுள்ளது. அருகிலுள்ள கட்டமைப்புகள் உணவை விழுங்கும்போது தொண்டையையும் சுவாசப் பாதைகளையும் பாதுகாக்க உதவுகின்றன. நாக்கு என்பது வெறுமனே ஒரு தட்டையான தசை மட்டுமல்ல. ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்ட சிக்கலான அமைப்பு.

EPIGLOTTIS என்பது உணவை விழுங்கும்போது பின்னோக்கி மடிந்து குரல்வளையை மூடி, உணவு சுவாசப் பாதைக்குள் செல்வதைத் தடுக்கும் ஒரு வால்வு ஆகும்.

TONSILS: தொண்டையின் இருபுறமும் அமைந்துள்ள இவை நோய் எதிர்ப்பு சக்தியின் அரணாகச் செயல்படுகின்றன. நாக்கின் நுனி. மிகவும் உணர்திறன் மிக்க பகுதி. எழுத்துக்களை துல்லியமாக உச்சரிக்கவும் மெல்லுவதற்கு முன் உணவின் தன்மையை மதிப்பிடுவதற்கும் பயன்படுகிறது.

நாம் உண்ணும் ஒவ்வொரு கவளத்திலும் உச்சரிக்கும் ஒவ்வொரு வார்த்தையிலும் ஆயிரக்கணக்கான நரம்பு செல்கள் இணைந்து செயல்பட்டு சிறந்த அனுபவத்தை வழங்குகின்றன. நமது புற உலகையும் அக உலகையும் இணைக்கும் இன்றியமையாத பாலங்களில் நாக்கும் ஒன்று. நாம் நாவால் மட்டும் சுவைப்பதில்லை. மாறாக நமது மனதாலும் சுவைக்கிறோம்.

நாக்கு வேதியியல் சமிக்ஞைகளை பெறுகிறது. மூளை அவற்றை உணர்வுகளாகவும் நினைவுகளாகவும் மொழிபெயர்க்கிறது. இந்தப் பணிகளை துல்லியமாக பகிர்ந்தளிப்பதில்தான் உயிரியலின் உச்சம் அடங்கியுள்ளது. இது, படம் வரைந்து பாகங்களைக் குறிப்பிடும் பதிவு அல்ல. பின் எதற்காக இந்தப் பீடிகை?

இந்த நாவு இருக்கிறதே நாவு, எப்படி வேண்டுமென்றாலும் மாற்றி மாற்றி பேசும். 'நான் அப்படிப் பேசவே இல்லை’ என்று பின்னர் சத்தியம் செய்யும். ”ஒரு கட்சிக்கு ஓட்டுப் போடுவது ஆறாவது கடமை” என்று நேற்று பேசிய நாக்கு, இன்றோ.. ”பெண்களுக்கு நடிகர் விஜய் மீதுள்ள ஈர்ப்பு கடவுளின் கிருபை” என்று பேசும். கட்டுப்படுத்தாவிட்டால் பேயாட்டம் போடும். கூரிய வாளைவிட கூர்மையாகக் காயப்படுத்தும். கல்லைவிடக் கடுமையாக சொல்லால் அடிக்கும்.

"எவர் இரு தாடைகளுக்கு இடையே உள்ள நாவிற்கும் இரு கால்களுக்கு இடையே உள்ள பிறவி உறுப்புக்கும் உத்தரவாதம் அளிக்கிறாரோ அவருக்காகச் சொர்க்கத்தை நான் உத்தவாதம் அளிக்கிறேன்” (புகாரி) என்று நபி (ஸல்) அவர்கள் சும்மாவா சொன்னார்கள்?

நூஹ் மஹ்ழரி

கருத்துகள்