போர்வையூர் ஜிப்ரி
"வணக்கம் ஐயா" தேனினும் இனிய குரலில் வணக்கம் தெரிவித்துக் கொண்டு நின்றவளை,
"நீங்கள்தானே தேவமனோகரி விசுவநாதன், உட்காருங்கள்..." என்றவாறே தலைநிமிர்ந்து நோக்கினேன்.
அவளும் அதே கணம்தான் என்னை ஏறிட்டுப் பார்த்திருக்க வேண்டும். அவள் முகத்தில் வியப்புக்குறி நிழலாடியது. என் முகத்திலும்தான்.
எனக்கு முன்னால் இருந்த நாற்காலியில் அவள் அமர்ந்தாள். மேசை மேல் இருந்த அவளுடைய விண்ணப்பத்தைக் கூர்ந்து கவனித்தேன்.
அவளேதான். பல வருடங்களுக்கு முன்னால் என்னுடைய உள்ளத்திலே புகுந்து, என்னுடைய இதயத்தைக் கவர்ந்து, பிறகு என்னை ஏமாற்றித் தவிக்கவிட்ட அதே 'மனோ'தான் அவள்.
இத்தனை வருடங்களுக்குப் பின்னால் என்னுடைய தயவை வேண்டி என் முன்னால் வந்து நிற்கிறாள்.
“அப்பா, கொழும்புத் தொழில்நுட்பக் கல்லூரியில் பொறியியல் துறையில் படிப்பதற்காக நான் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறேன்...” என்னுடைய உற்சாகம் அப்பாவை அசைய வைத்ததாகத் தெரியவில்லை.
“என்னப்பா பேசாமலிருக்கிறீர்கள்?”
“ம்...” அப்பா ஒரு நீண்ட பெருமூச்சு விட்டார்.
“தம்பி... கொழும்புக்குப் போய்ப் படிக்கிறதாக இருந்தால் மாசம் இருநூறு முன்னூறென்று வேணுமே... இப்போ நாங்கள் இருக்கிற நிலையில்...” அவர் வார்த்தையை முடிக்காமல் என்னைப் பார்த்தார்.
“அப்பா, நான் ஒன்று சொன்னால் கோபிக்க மாட்டியளே...”
“சொல்லு தம்பி...”
“நம்முடைய சங்கரி மாமா கொழும்பிலதானே இருக்கிறார். அவருடைய வீட்டில் நான் தங்கி இருந்து படிக்கிறேன்...”
சங்கரி மாமா என்னுடைய அம்மாவின் சொந்தத் தம்பி. கொழும்பில் நல்ல வசதியோட இருந்தார். ஊருக்கு வந்தால் எங்களோடுதான் தங்குவார். அந்தச் சொந்தத்தை அப்பாவுக்கு நினைவுபடுத்தினேன்.
“தம்பி சொந்தம், பந்தம் எல்லாம் தூர இருக்கிற வரைக்கும் நல்லாகத்தான் இருக்கும். ஆனால் ஒன்றாக இருந்தால் அது பகையைத்தான் வளர்க்கும்.”
அப்பாவின் உபதேசங்கள் என்னை மாற்றவில்லை. எப்படியோ பிடிவாதம் பிடித்து கொழும்புக்கு வந்து விட்டேன்.
வந்ததுக்குப் பிறகுதான் அப்பா சொன்ன சொற்களின் அர்த்தம் எனக்கு விளங்கியது.
அப்பா எவ்வளவு அனுபவசாலி என்பதைப் புரிந்து கொண்டேன்.
மாமா, தான் உண்டு, தன்னுடைய வியாபார வேலைகள் உண்டு என்று இருந்து விடுவார்.
மாமி அமிர்தத்துக்கோ நான் சம்பளமில்லாத வேலைக்காரன்.
மாமாவுக்கு முன்னால் எல்லாம் மரியாதையோடுதான் பேசுவாள். மாமா வீட்டில் இல்லாத நேரங்களில் அவளுடைய போக்கே வேறு.
மூன்று வருஷங்களுக்குப் பின்னால் கிடைக்கப் போகும் 'பட்டத்'தை நினைத்து மனதைச் சமாதானப்படுத்திக் கொண்டு பொறுமையுடன் இருந்தேன்.
சங்கரி மாமாவின் ஒரே மகள் மனோகரி.
அவளை மாமாவும், மாமியும் 'மனோ' என்று செல்லமாகக் கூப்பிடுவார்கள். நானும் ஒருநாள் ஏதோ நினைவில் அவளை 'மனோ' என்று கூப்பிடப் போய், மாமியிடம் வசை வாங்கிக் கொண்ட கதை வேறு.
வேளைக்கொரு அலங்காரமும், பொழுதுக்கொரு சினிமாப் பாட்டுமாக அவள் என்னுடைய நினைவுகளைச் சித்திரவதை செய்துகொண்டிருந்தாள்.
மாமி காணாத நேரத்தில் அவளொடு ஆசையாக ஏதாவது பேச நினைத்துப் போவேன். ஆனால் அவளோ என்னோடு அவசியத்துக்கு மேலாக ஒரு வார்த்தையும் பேச மாட்டாள். அது மாமியால் போதிக்கப்பட்ட கௌரவத்தின் எதிரொலி போலும்.
அவள் என்னைப் பார்த்து ஒரு சின்னப் புன்னகையாவது உதிர்க்க மாட்டாளா? என்று ஏங்குவேன். என்னுடைய ஏக்கம் அந்த மூன்று வருட காலத்திலுமே நிறைவேறவில்லை.
தொழில்நுட்பக் கல்லூரியின் கனிஷ்ட பொறியியலாளர் பட்டத்துடன் வெளியேறினேன்.
நான் பரீட்சையில் சித்தியடைந்த செய்தி கேட்டு மாமா மிகவும் மகிழ்ச்சியடைந்தார். மாமி முகத்தைத் தோளில் இடித்துக்கொண்டாள். பட்டத்துடன் பல படி ஏறி இறங்கியும் வேலைதான் கிட்டவில்லை. கடைசியில், ஒரு சின்னக் கம்பனியில் நூற்றியிருபது ரூபா சம்பளத்தில் பயிற்சியாளனாகச் சேர்ந்தேன்.
நூற்றியிருபது ரூபாயில், வரவையும் செலவையும் சமப்படுத்தும், கொழும்பு 'போடிங்' வாழ்க்கை என்னும் அதிசயப் பயிற்சியில் நான் ஈடுபட்டிருந்த அதே நேரத்தில், பெண்களைப் பெற்ற புண்ணியவான்கள் என்னுடைய அப்பாவை முற்றுகையிட்டுக் கொண்டிருந்தனர்.
பதவிதான் உயர்ந்தது என்று எண்ணுகின்ற சமுதாயத்தினர்களல்லவா? எப்படி சும்மாயிருப்பார்கள்.
"என்னுடைய மச்சான் சங்கரியினுடைய உதவியால்தான், என்னுடைய மகன் ராமநாதன் இப்படி ஒரு நல்ல நிலையில் இருக்கிறான்... சங்கரியைக் கேட்காமல் நான் ஒரு முடிவும் செய்ய ஏலாது"
என்று சொல்லி வந்தவர்களையெல்லாம் கலைத்துக் கொண்டிருந்தார் என்னுடைய அப்பா.
தரகர்களின் தொல்லை பொறுக்காமல் ஒருநாள் அப்பா கொழும்புக்குப் புறப்பட்டு வந்துவிட்டார்.
"சங்கரி உன்னுடைய உதவியாலதான் உவன் ராமநாதன் படிச்சு முன்னுக்கு வந்திருக்கிறான். அவனுக்கு நீ செய்திருக்கிற உதவிகளுக்கு அவனையே உன்னுடைய மகளுக்குச் செய்து வைக்கலாமென்று யோசிக்கிறேன்."
மாமாவைப் பார்க்கப்போன அப்பா இப்படித்தான் சொன்னாராம். அதற்கு மாமா,
"வல்லிபுரம், இது நான் மட்டும் முடிவு செய்யக்கூடிய விஷயமல்ல, உவள் அமிர்தத்தையும், பெட்டை மனோவையும் ஒரு சொல் கேட்டுப் போட்டு உனக்கு முடிவு சொல்லுறன்" என்றாராம்.
இதற்கிடையில் மாமி உள்ளுக்கு இருந்து மாமாவைக் கூப்பிட்டு, அப்பா காதுக்குக் கேட்கும்படியாகவே,
"உங்களுடைய மச்சான் என்ன நினைச்சுக் கொண்டு இங்க வந்து பெண் கேட்கிறார். ம்... என்னுடைய பெட்டை 'வார்சிட்டி'யில் படிக்கிறாள். அடுத்த வருஷம் பி.ஏ. பாஸ் பண்ணிடுவாள். அவளுக்குக் குறைஞ்சது ஒரு டொக்டர், அல்லாட்டி இஞ்சினியரைத்தான் செய்து வைப்போம். அதை விட்டுட்டு, மாசம் நூறு ரூபாயில கொல்லன் வேலை செய்யுற மாப்பிள்ளையா பார்க்கப் போறியள்"
என்று இரைந்திருக்கிறாளாம்.
என்னுடைய அப்பாவுக்கு, அவமானம் ஒரு பக்கம், ஆத்திரம் ஒரு பக்கம். அழாத குறையாக நடந்ததை என்னிடம் சொல்லிவிட்டு அன்றே போய் விட்டார். அதற்குப்பிறகு நானும் சங்கரி மாமாவைப் பார்க்கப் போவதை விட்டுவிட்டேன்.
மனோகரிக்கு, பெரிய இடத்தில் கல்யாணமாகியது. கல்யாணப் படத்தைப் பத்திரிகையில் கண்டேன்.
அதன் பிறகு,
இன்றுதான் அவளைக் காண்கிறேன்.
கண நேரத்தில் என்னுடைய மனதில் நிழலாடிய பழைய நிகழ்ச்சிகளை ஒதுக்கிவிட்டு அவளை நோக்கினேன்.
அவளுடைய கழுத்திலும், காதிலும் ஜொலித்துக் கொண்டிருந்த நகைகள் எதையும் காணவில்லை.
நெற்றியில் குங்குமம் இல்லை. வெறுமை, நீர் வற்றிய குளமாக இருந்த அவளைக் காண என்னுள்ளம் வேதனையடைந்தது.
"அத்தான், நீங்கள் இங்கிலாந்திலிருந்து 'இஞ்சினியர்' பட்டம் பெற்றுத் திரும்பியதைப் பேப்பரில் படித்தேன். ஆனால் இங்கு உங்களைச் சந்திப்பேனென்று நான் எதிர்பார்க்கவில்லை."
"என்னுடைய கதை இருக்கட்டும் உன்னைப் பற்றிச் சொல்லு, மாமாவும் மாமியும் சுகமாக இருக்கிறார்கள்தானே."
அவளுடைய முகம் திடீரென்று மாறியது. உள்ளத்தில் எழுந்த வேதனையை அடக்குவதற்காக உதட்டைக் கடித்துக் கொண்டாள்.
"அத்தான் உங்களை உதாசீனப்படுத்திவிட்டு ஒரு பணக்கார வழக்கறிஞனைக் கல்யாணம் செய்து கொண்டேன். ஆனால் என்னுடைய கணவர் என்னைவிட மதுப்புட்டியைத்தான் நேசித்தார். ஒருமுறை நாங்களெல்லாரும் குடும்பத்தோடு மலைநாட்டுக்குப் போனோம். வரும் வழியில், மது மயக்கத்தில் என்னுடைய கணவர் காரை விபத்துக்குள்ளாக்கி விட்டார். அந்த விபத்தில் நான் மட்டும்தான் உயிர் தப்பினேன். வங்கியில் இருக்கும் பணத்தால் ஏதோ மரியாதையாக வாழ்க்கை நடத்துகிறேன். அந்தப் பணம் கரைந்து கொண்டே போகின்றது. ஏதாவது தொழில் செய்தால்தான் மானமாகப் பிழைக்கலாம் என்ற நிலையில் இருக்கிறேன்."
அவளுடைய கண்களிலிருந்து நீர் தாரை தாரையாக ஓடிக் கொண்டிருந்தது.
அவள் கண்களைத் துடைத்துக் கொள்ளும் வரை பொறுமையோடு காத்திருந்தேன்.
"அத்தான் நீங்கள் நினைத்தால் இந்த வேலையை எனக்குத் தரலாம். முன்பு நடந்தவைகளை மறந்துவிட்டு" அவள் என்னை ஏக்கத்தோடு நோக்கினாள்.
"மன்னித்துவிடு 'மனோ" அந்தப் பெயரைச் சொல்லும் போதே என்னுடைய நாடித் துடிப்பு இரண்டு மடங்காவதை உணர்ந்தேன். "நான் இங்கு பொறுப்புள்ள ஒரு வேலையில் இருக்கிறேன், இங்கு தகுதியுள்ள ஒருவரைத் தேர்ந்தெடுப்பதுதான் என்னுடைய கடமை. அந்தக் கடமையிலிருந்து தவற முடியாத நிலையில் நான் இருக்கிறேன்."
"அப்படியானால்"
"உன்னைவிடத் தகுதியுள்ள பல பேர் இந்த வேலைக்கு விண்ணப்பித்திருக்கிறார்கள்."
அவள் என்னைப் பார்க்காமலே எழுந்து நடந்தாள்.
எனக்குள் சிரித்துக்கொண்டே, அடுத்த ஆளைக் கூப்பிட அழைப்புமணியைத் தட்டினேன்.
******************
வீட்டு வாசலிலிருந்த பொத்தானை அழுத்தினேன். மணிச்சத்தம் கேட்டு கதவைத் திறந்த 'மனோ' என்னைக் கண்டதும் மீண்டும் கதவை மூட முயற்சித்தாள்.
அதற்குள் நான் உள்ளே புகுந்துவிட்டேன்.
அசிங்கமான ஒரு நோயாளியைப் பார்க்கும் ஒரு 'டாக்டரை'ப் போல அவள் என்னைப் பார்த்தாள். அழகு மலரை நோக்கும் ஒரு கலைஞனைப் போல நான் அவளைப் பார்த்தேன்.
"என்னைப் பழிவாங்கிவிட்ட மகிழ்ச்சியில், என்னுடைய வேதனையைப் பார்த்து ரசிக்கலாமென்று வந்தீர்களா?"
அவள் வார்த்தைகளால் என்னைச் சாடினாள்.
"போய்விடுங்கள்."
"மனோ, கோபப்படாதே, நான் அப்போது கடமையைச் செய்யும் நோக்கத்துடன் சொன்னதைக் கேட்டுக் கோபித்திருப்பாய்."
"அதற்குச் சமாதானம் செய்து கொள்ள வந்தீர்களாக்கும். உங்களுடைய அதிகாரத்தின் மமதை உங்களுடைய மனதில் இரக்க உணர்ச்சிகூட இல்லாமல் செய்துவிட்டது."
"மனோ, வீணாக என்னை ஏசாதே. ஒரே ஒருமுறை மனோ என்று உன்னை ஆசையோடு கூப்பிட்டதற்கு, உன்னுடைய அம்மா என்னைத் திட்டிய திட்டுகளை இன்றும் நான் மறக்கவில்லை. உன்னுடைய ஒரு புன்னகைக்காக காலம் முழுவதும் உன்னுடன் மகிழ்ச்சியாக வாழ வேண்டுமென்று ஆசைப்பட்டவன் நான். ஆனால் அதுவும் கைகூடவில்லை."
"அதற்கான தண்டனையைத்தான் அளித்துவிட்டீர்களே."
"இல்லை மனோ, இல்லை. உனக்குத் தண்டனை அளிக்க எந்த உரிமையும் எனக்கில்லை, நீதான் என்னைத் தண்டிக்கிறாய்."
"என்ன சொல்லுகின்றீர்கள்?"
"உன்னுடைய நினைவுகளுடனேயே இன்னும் நான் ஒண்டியாக வாழ்கிறேனே, இன்னுமா உனக்குப் புரியவில்லை.”
"அத்தான்."
அவளுடைய கண்களிலே ஒரு ஒளி. என்னுடைய இதயத்தின் தாபத்தைப் புரிந்து கொண்ட ஒளி!
"ஆமாம் மனோ... நடந்ததையெல்லாம் கனவாக எண்ணிக் கொள்"
"அத்தான்... நானோ விதவை, எங்களுடைய சமூகம்.... இதை ஏற்றுக் கொள்ளுமா?"
அவளை என்னோடு சேர்த்து அணைத்துக்கொண்டேன். அவள் என்னுடைய மார்பில் முகம் புதைத்தபடி விம்மினாள். எங்கோ ஒரு ரேடியோவில் எழுந்த இசை எங்களுடைய காதுகளுக்குத் தெளிவாகக் கேட்டது.


கருத்துகள்
கருத்துரையிடுக