இது வெறும் வார்த்தை மட்டும் அல்ல. எனது உள்ளத்தால் உணர்ந்து உனக்காக கூறும் என் இதய வாசகம்.
என் வாழ்க்கை பயணத்தின் முடிவு வரை உன்னால் என்னோடு பயணிக்க முடியாது என்று தெரியும். நம் பயணம் எப்போது, எச்சந்தர்ப்பத்தில், எங்கு, தரிப்படையும் என்று எனக்கு தெரியாது. எந்த தரிப்பிடத்தில் நீ இறங்கினாலும், இறக்கி வைக்க முடியாது நீளும் உன் நினைவுகள். நீ என் இதயத்தோடு கலந்த பின்னும் எப்படி இறக்கி வைப்பது உன் நினைவுகளை?
உன்னை நான் இப்போது சந்திக்காமல் இதற்கு முன்னதாக சந்தித்திருக்கக் கூடாதா என்று எனக்குள் கேட்கிறேன். நீ ஒரு தற்காலிக வரமாக தாமதமாக வந்தாய் என்னிடம். உன்னால் நான் என்னை உணர்கிறேன். உணர்ந்தேன். தொடர்ந்து பேசாவிட்டாலும் பேசும் சில நொடிகள் தொட்டு செல்லும் உன் நினைவுகள் என்றும் விசித்திரமானது. பல வருடமாக பழகிய உணர்வு. மனம் விட்டு உன்னோடு பேச நினைத்தாலும் சில பல காரணங்களால் மனம் திறக்க தயக்கம் எனக்கு. மனம் திறந்தால் நீ அதில் இருப்பாய் மணம் வீசும் அழகான மலர்ச்செடியாக!
உன் கோபத்தில் நியாயம் உண்டு. உன் அன்பில் அக்கறை உண்டு. உன் மௌனத்தில் அர்த்தம் உண்டு. உன் வார்த்தையில் உண்மை உண்டு. மொத்தத்தில் உன் மீது முழு நம்பிக்கை உண்டு. நீ என் வாழ்வில் இருந்து நீங்கினாலும் நீங்காமல் நீளும் உன் நினைவுகள். நீ என்னை மறந்தாலும் மறக்காது மனதிற்குள் பத்திரப்படுத்தி வைப்பேன் உன்னை.
உன்னோடு பயணிக்காவிட்டாலும் பரவாயில்லை. என்றும் உன் நினைவுகள் மட்டும் போதும் எனக்கு. என் ஆசை நிராசை அடையும் என்று தெரிந்தும் உன்னோடு மட்டும் பயணிக்க ஆசை எனக்கு. உன் கைகளை இறுகப்பற்றி, உன் தோளில் சாய்ந்து, நிம்மதி பெருமூச்சுடன் உன்னோடு உனக்காக பயணிக்க ஆசைப்படுகிறேன்.
அந்த ஒரு நொடி போதும் என் கடந்த கால காயங்களின் தழும்புகள் மறைய! அந்த ஒரு நொடி போதும் என் கனவுகள் நனவாக! அந்த ஒரு நொடி போதும் என் வாழ்வை நான் வென்றிட! உன் திருப்தியில் வாழ்ந்தால் அந்த நொடி என் உயிர் என்னை விட்டு சென்றாலும் கலங்க மாட்டேன்.
என்றாலும் உனக்கான பிராத்தனைகளுடன் விடை பெறுகிறேன். உன்னைப் போல என் மனதைப் புரிந்து நேசித்தவர் இதுவரை இருந்ததில்லை. இனியும் இருப்பார்களா என்றும் தெரியவில்லை. என்றாலும் இனியும் உன்னை போல எவரும் இருக்கப் போவதுமில்லை.
காதல் மொழிகளால் உன்னை அழைத்திட முடியாது. ஏனெனில் இது கானலாகும். ஆம் என்றாவது ஒரு நாள் இதுவும் கானலாகி விடும். காணாமலேயே போய் விடும். ஆனாலும் நீ இருப்பாய் என்னோடு நினைவுகளாக!
மீண்டும் சொல்கிறேன் நான் உன்னை அதிகமாக நேசிக்கிறேன். இன்னும் அதிகமாக உன்னை நேசிப்பேன்.
கருத்துகள்
கருத்துரையிடுக