அணு, கதிரியக்க பொருட்களுடன் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு பிரவேசித்த சீனக் கப்பல்

துறைமுகத்திற்கு பிரவேசித்த கப்பல்

அணு முன் நிலையங்களில் பயன்படுத்தப்படும் யுரேனியம் எனும் கதிரியக்க உலோகம் அடங்கிய, சீன கப்பலொன்று அம்பாந்தோட்டை துறைமுகத்துக்குள் பிரேவேசித்தமையால் நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஐரோப்பாவின் பெரிய துறைமுகமாக கருதப்படும் நெதர்லாந்தின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ரொட்டர்டாம்  துறைமுகத்திலிருந்து இருந்து சீனா நோக்கி பயணிக்கும் போதே இந்த கப்பல்  இயந்திரக்கோளாறு காரணமாக , அம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் பிரவேசித்துள்ளது.

இவ்வாறு அம்பாந்தோட்டை துறைமுகத்துக்குள் பிரவேசிப்பதற்கான அனுமதியை, அக்கப்பலின் இலங்கை பிரதிநிதி ஊடாக, இலங்கை துறைமுகங்கள் அதிகார சபையிடமிருந்து அக்கப்பல் பெற்றிருந்ததாக அறிய முடிகின்றது.

இலங்கை அணு சக்தி ஒழுங்குபடுத்தல் பேரவையில் அனுமதி பெறவில்லை

எவ்வாறாயினும் கதிரியக்க பொருட்களுடன் கப்பலொன்று, இலங்கை அணு சக்தி ஒழுங்குபடுத்தல் பேரவையின் அனுமதியைப் பெற்றிருக்கவில்லை.

இந் நிலையில் குறித்த சீன கப்பலானது, அம்பாந்தோட்டை துறைமுகத்துக்குள் நுழைந்த பின்னர், அக்கப்பலில்  இருந்த கொள்கலன்களுக்குள் யுரேனியம் எனும் கதிரியக்க பதார்த்தம் இருப்பது தொடர்பில், அம்பாந்தோட்டை  துறைமுகத்தின் கட்டுப்பாட்டாளருக்கு தெரியவந்துள்ளது.

அந்த தகவலை அவர், இலங்கை அணு சக்தி ஒழுங்குபடுத்தல் பேரவை மற்றும் இலங்கை அனுசக்தி கட்டுப்பாட்டு சபை ஆகியவற்றுக்கு அறிவித்ததை அடுத்து, உடனடியாக குறித்த கப்பலை அம்பாந்தோட்டை துறைமுகத்திலிருந்து வெளியேற அறிவித்தல் விடுத்ததாக இலங்கை அணு சக்தி ஒழுங்குபடுத்தல் பேரவையின் பணிப்பாளர் நாயகம் எச்.எல். அனில் ரஞ்சித் தெரிவித்தார்.

இவ்வாறான இரசாயன பொருட்களை நாட்டிற்கு கொண்டு வரும் போது, விசேட அனுமதி பெறப்படல் வேண்டும் எனவும்  இலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் பேரவையின் பணிப்பாளர் நாயகம் எச். எல். அனில் ரஞ்சித்  தெரிவித்தார்.

இருப்பினும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகை தந்துள்ள கப்பலுக்கு எவ்வித அனுமதியும் பெற்றுக்கொள்ளப்படவில்லை எனவும் இதனால் துறைமுகத்திலிருந்து கப்பலை வெளியேற்றுமாறு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சஜித் பாராளுமன்றத்தில் கேள்வி

ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வேதியல் அணு மூலக்கூறுகளுடன் சர்வதேச கப்பலொன்று வந்துள்ளமை உண்மையா? குறித்த நாட்டின் தூதரகத்தின் வலுயுறுத்தலுக்கு கட்டுப்பட்டு அரசாங்கம் இதனை கண்டுகொள்ளாது மௌனம் காக்கின்றதா? இது உண்மையென்றால் நாட்டின் நிலைமை என்னவாகும் என தெரியுமா என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சபையில் கேள்வி எழுப்பினார். அதேபோல் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு  நாளை மறுதினம் துறைமுக நகருக்கு கற்கை விஜயம் ஒன்றினை மேற்கொள்ள வருமாறு சீன தூதரகத்தினால் விடுக்கப்பட்டுள்ள அழைப்பு குறித்தும் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பினர்.

பாராளுமன்ற அமர்வுகள் நேற்று (21.04.2021) புதன்கிழமை இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளையில் ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வந்துள்ள கப்பல் குறித்து வெளிவரும் செய்தி தொடர்பில் சபையில் கேள்வி எழுப்பினார்.

"சமூக வலைத்தளங்களில் செய்தி ஒன்று பகிரப்பட்டு வருகின்றது. நேற்று 20 ஆம் திகதி  ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு சர்வதேச கப்பலொன்று வேதியல் அணு மூலக்கூறுகளுடன் உள்நுழைந்துள்ளது. இதனை இலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு கண்டறிந்துள்ளனர். இது உண்மையான செய்தியென நாம் நம்புகின்றோம், அது தவறான செய்தி சென்றால் அது குறித்து அரசாங்கம் அறிவிக்க முடியும். ஆனால் இலங்கை கடற்படைக்கு கூட இந்த கப்பலை பரிசோதனை செய்ய அனுமதிக்கவில்லை என கூறப்படுகின்றது.

துறைமுகத்தில் இருந்து இந்த கப்பலை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என இலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது. ஆனால் இப்போது வரையிலும் இந்த விடயத்தில் அரசாங்கம் மௌன கொள்கையை பின்பற்றி வருகின்றது. ஒரு வெளிநாட்டு தூதரகத்தின் வலியுறுத்தலுக்கு கட்டுப்பட்டே அரசாங்கம் இவ்வாறு செயற்பட்டு வருகின்றது எனக் கூறப்படுகின்றது. எனவே இந்த செய்தியின் உண்மை தன்மையை நன்கு ஆராய்ந்து அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வேதியல் அணு மூலக்கூறுககள் எமது நாட்டுக்குள் கொண்டுவருவது என்பது பாரிய அச்சுறுத்தலாகும். எனவே அரசாங்கம் உடனடியாக இதனை ஆராய்ந்து உண்மை பொய் தன்மைகளை ஆராய்ந்து உண்மையென்றால் உடனடியாக கப்பலை வெளியேற்ற வேண்டும், அல்லது இலங்கை கடற்படையை கொண்டு ஆராய அனுமதிக்க வேண்டும்" என அவர் சபையில் வலியுறுத்தினார்.

கொழும்பு துறைமுக நகர் கற்கை விஜயம் ஒன்றினை சீன தூதரகம் ஏற்பாடு செய்துள்ளதாகவும், ஏப்ரல் 22 ஆம் திகதி பாராளுமன்ற அமர்வுகள் முடிவுக்கு வந்த பின்னர் இந்த விஜயம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் குறித்த குறுந்தகவலில் கூறப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் எமது ஆட்சியிலும் இவ்வாறு ஏற்பாடு செய்யப்பட்ட போதும் நகர அபிவிருத்தி அதிகாரசபையே ஏற்பாடு செய்திருந்தது. ஆனால் எமது நாட்டின் நிலப்பரப்பில் விஜயம் ஒன்றினை செய்ய சீன தூதரகம் எவ்வாறு ஏற்பாடுகள் செய்ய முடியும் என கேள்வி எழுப்பினார். இதனை கைவிடுமாறு அமைச்சர் தினேஷ் குணவர்தன சபையில் தெரிவித்த வேளையில் குறித்த குறுஞ்செய்தி தொடர்பில் தான் ஆராய்ந்து பார்ப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.

கடற்படை பேச்சாளரின் விளக்கம்

இதேவேளை, குறித்த கப்பல் தற்போது துறைமுகத்திற்கு வெளியில் நங்கூரமிடப்பட்டுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் இந்திக்க டி சில்வா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான பின்னணியில்,  அம்பாந்தோட்டை துறைமுகத்தின் பாதுகாப்பு சார் நடவடிக்கைகள் இலங்கை கடற்படையினரின் கட்டுப்பாட்டிலேயே உள்ள நிலையில், இது தொடர்பில் கடற்படை ஊடகப் பேச்சாளர் கெப்டன் இந்திக டி சில்வாவிடம் வீரகேசரி வினவியது.

இதற்கு பதிலளித்த கெப்டன் இந்திக டி சில்வா, குறித்த கப்பலானது துறைமுகத்துக்குள் சட்ட விரோதமாக நுழையவில்லை என தெரிவித்தார்.

அத்துடன் ' சர்வதேச அளவில் இவ்வாறான பொருட்களை கப்பல்களில் கொண்டு செல்வது தடைசெய்யப்பட்ட விடயமல்ல.

எனினும் எமது நாட்டில் உள்ள சட்ட திட்டங்களுக்கு அமைய அக்கப்பலை எமது துறைமுகத்திலிருந்து வெளியேற அறிவுறுத்தப்பட்டது.

அதன்படி அக்கப்பல் எமது துறைமுகத்திலிருந்து வெளியேறியுள்ளது. துறைமுகத்திற்கு வெளியில் அக்கப்பல் தற்போது ( நேற்று நண்பகல்)நங்கூரமிடப்பட்டிருந்தது.

இயந்திர கோளாறு சரி செய்யப்பட்டதன் பின்னர் அக்கப்பல் அதன் பயணத்தை தொடரும் என எதிர்ப்பார்க்கிறோம்.' என  கடற்படைப் பேச்சாளர் கெப்டன் இந்திக்க டி சில்வா தெரிவித்தார்.

அணு சக்தி ஒழுங்குபடுத்தல் பேரவையின் பணிப்பாளர் விளக்கம்

இந் நிலையில் இந்த விடயம் தொடர்பில், இலங்கை அணு சக்தி ஒழுங்குபடுத்தல் பேரவையின் பணிப்பாளர் நாயகம் அனில் ரஞ்சித்திடம் வினவப்பட்ட போது அவர் இது குறித்து விளக்கமளித்தார்.

'நெதர்லாந்திலிருந்து சீனா நோக்கி பயணிக்கும் வழியே ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக, அதனை சரி செய்துகொள்ள அம்பாந்தோட்டை துறைமுகத்துக்குள் பிரவேசிக்க குறித்த கப்பல் அனுமதி கோரியுள்ளது.

அக்கப்பலின் இந் நாட்டு பிரதிநிதி ஊடாக இந்த அனுமதி துறைமுக அதிகார சபையிடம் கோரப்பட்டுள்ளது. இதற்கான அனுமதியும் அந்த அதிகார சபையினால் வழங்கப்பட்டுள்ளது.

உண்மையில் அவ்வாறு அனுமதி கோரி உள் நுழையும் கப்பலில் உள்ள பொருட்கள் தொடர்பில்  முன் கூட்டியே அறிவிக்க வேண்டும். எனினும் குறித்த கப்பலின் உள் நாட்டு பிரதி நிதி அக்கப்பலில் கதிரியக்க பொருட்கள் இருப்பதை வெளிப்படுத்தியிருக்கவில்லை.

இவ்வாறான இரசாயன பொருட்களை நாட்டிற்கு கொண்டு வரும் போது, விசேட அனுமதி பெறப்படல் வேண்டும் என அவர் கூறினார்.

அவ்வாறு அனுமதி வழங்கப்படும் போது, குறித்த இரசாயன பொருள் என்ன, அது எந்த நாட்டிற்கு கொண்டு செல்லப்படுகின்றது உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து ஆராயப்படும் .

எனினும், ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகை தந்துள்ள கப்பலுக்கு அவ்வாறான இரசாயன , கதிரியக்க பொருட்களை கொண்டுவர எவ்வித அனுமதியும் பெற்றுக்கொள்ளப்படவில்லை.

அம்பாந்தோட்டை துறைமுகத்தின் கட்டுப்பாட்டாளர் தந்த தகவல் பிரகாரம், எமது குழுவொன்றும் அம்பாந்தோட்டைக்கு சென்ரது. இவ்வாறான நிலையில் கப்பலில், கதிரியக்க உலோகமான, ணு மின் நிலையங்களில் பயன்படுத்தபப்டும் யுரேனியம் இருப்பது பின்னர் எம்மால் கண்டறியப்பட்டது.  இதனால் துறைமுகத்திலிருந்து கப்பலை வெளியேற்றுமாறு நாம் பணிப்புரை விடுத்தோம்.' என அணு சக்தி ஒழுங்குபடுத்தல் பேரவையின் பணிப்பாளர் நாயகம் அனில் ரஞ்சித் தெரிவித்தார்.

இவ்வாறான நிலையில், இந்த விடயம் தொடர்பில் தற்போது விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில்,  குறித்த கப்பலின் உள்நாட்டு பிரதிநிதிக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது.

Source: Veerakesari

LNN Staff

கருத்துகள்