சேரிப்புறச் சேறு

அன்றொரு நாள் சேரிப்புறம் சென்றேன். சின்னஞ்சிறுசுகள் கூடி விளையாடக் கண்டேன். மேலாடை இல்லை காலணிகள் இல்லை. பேச்சினில் நெளிவு சுளிவு இல்லை. ஓலைக் கூரையிலும் ஓராயிரம் ஓட்டை. சேறு சகதிகளுடன் அங்கே வறுமையின் கோட்டை.

ஆனால்.

ஒற்றைப்பந்துடன் பத்துப்பேர் விளையாடி மகிழக் கண்டேன். பழைய சாதத்தையும் பகிர்ந்துண்ணும் பெருந்தன்மை கண்டேன். குச்சிமிட்டாயில் கோடியின்பம் குடியிருக்கக் கண்டேன்.

நுனிநாக்கு ஆங்கிலத்தில் மறைந்து தாக்கும் விஷம் அங்கில்லை. தொலைபேசிகளுடன் தொலையும் பொழுதுகளில்லை. அடுக்குமாடிகளில் சிறைப்படுத்தல்களில்லை. விரைவுணகளில் பருத்த தேகங்களில்லை.

ஒட்டு மொத்த மகிழ்ச்சியும் சேரிப்புறச்சேற்றில் கவிபாடக் கண்டேன். நகரப்புறமோ. இலை உதிர்த்த பட்டமரமாக!

மக்கொனையூராள்

கருத்துகள்