பீ.சீ.ஆர் பரிசோதனையால் நோன்பு முறிந்து விடுமா?

கொரோனா காலத்தில் 'கொவிட் 19' மனித வாழ்வில் ஒருபெரும் சோதனையாகும். சோதனைகள் மனிதனை புடம்போட்டு நெறிப்படுத்துகின்றன. எனவே, பல்வேறு அசௌகரியங்களை தரும் கொரோனா தொற்று வணக்கவழிபாடுகளுக்கு தடையல்ல. கொரோனா தொற்றுநோய்க் காலம் நோன்பை விடுவதற்கான ஒரு சலுகையும் அல்ல. அது ஒரு சோதனை. அதற்குமுகம் கொடுப்பதே மனிதன் மீதுள்ள பொறுப்பாகும்.

நோன்பு வைப்பது மனித உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்துவதில்லை. பதிலாக நோன்பு உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்றே துறைசார்ந்த வைத்திய நிபுணர்களின் ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளதாக இஸ்லாமிய அறிஞர்கள் ஆதாரங்களோடு குறிப்பிட்டுள்ளார்கள். இறந்த கலங்களை உயிர்ப்பிக்கும் ஆற்றல் நோன்புக்கு உள்ளதாகவும் வைத்திய ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.

'நோன்பு நோற்பதே உங்களுக்கு சிறந்தது'என சூரா பகராவின் 184ம் வசனம் கூறுவது எவ்வளவு பேருண்மையாகும். நோன்பு உலக வாழ்வுக்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் மறுமை வெற்றிக்கும் நல்லது என்பதே இறைவழிகாட்டலாகும்.

பயணம் மற்றும் நோய் காரணமாக நோன்பை விடுவதற்கான சலுகை உண்டு. பின்னர் அவர்கள் அந்தநோன்பை கழாச் செய்ய வேண்டும். கொரோனா தொற்றிய ஒருவர் நோன்பை தொடர முடியாது அவஸ்தைப் பட்டால் அவர் ஒருநோயாளி என்ற வகையில் நோன்பை முறித்துவிட்டு பின்னர் கழாச் செய்ய வேண்டும். நோய் காரணமாக நோன்பை விடுவதும் கழாச் செய்வதும் பரவலாக அனைவரும் அறிந்தவிடயமே.

கொரோனா தொற்றும் என்று பயந்து நோன்பைவிட முடியாது என்பது ஷரீஆவின் வழிகாட்டலாகும். தகுதிவாய்ந்த ஒன்றுக்கு மேற்பட்ட வைத்திய நிபுனர்கள் பரிசோதனை மூலம் கொவிட் 19 தொற்றும் வாய்ப்பு 50 வீதத்திற்கு மேல் சாதகமாக உள்ளது என்பது நிரூபனமானால் கழாசெய்யும் நிய்யத்தோடு நோன்பை விடுவதற்கு முடியும் என ஹனபி பிக்ஹ் கலைக்களஞ்சியமான ஹாஷியதுல் இப்னுல் ஆபிதீனில் விளக்கம் தரப்பட்டுள்ளது. (1/116) மாலிக் மத்ஹபில் நோய் பீடிக்கும் என்ற பயத்தை காரணம் காட்டிநோன்பு நோற்பதை விட முடியாது என்ற கருத்தே வலுவான தெரிவாக உள்ளது.

கொவிட் 19 பரிசோதனை நோன்பை முறிக்குமா என பலர் வினவுகின்றனர்.

துறைசார்ந்த மருத்துவ நிபுணர்கள் இந்த பரிசோதனை எவ்வாறு நடைபெறுகிறது என்பதை தெளிவுபடுத்தியதன் பின்னரே இந்த கேள்விக்கான மார்க்கத் தீர்ப்பை வழங்கமுடியும் என முஸ்லிம் அறிஞர்களின் சர்வதேச ஒன்றியத்தின் கட்டார் பத்வாகுழுத் தலைவர் தனதுபத்வாவில் குறிப்பிட்டுள்ளார்.

துறைசார்ந்த வைத்திய நிபுணர்களின் கூற்றின் படி கொவிட் 19 பரிசோதனை என்பது சுவாச சுரப்பிகளின் மாதிரியை பெறுவதற்காக ஒரு முறைமையாகும். வலைந்து நெலிந்து கொடுக்கும் ஒரு நீண்ட மென்மையான கோளின் நுணியில் ஒருவகை விசேட பருத்தி பஞ்சி பொருத்தப்பட்டிருக்கும்.

தொண்டை மற்றும் மூக்கின் அடிப்பாகத்திற்கு அதனை செழுத்தி தேவையான மாதிரி பெறப்படும்.

இந்த பரிசோதனை மூலம் வயிற்றுக்குள் எதுவும் செல்வதில்லை. அதற்கு பயன் படுத்தப்படும் விசேடகுச்சியும் அதில் இருக்கும் பருத்தியும் தின்மமானதே. அதனால் எந்ததிரவும் கசிந்துஉள்ளே செல்லும் நிலை இல்லை. எனவே, நோயை அடையாளம் காண்பதற்கு செய்யப்படும் இந்த பரிசோதனை நோன்பை முறிக்காது என்பது தெளிவாகும். அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பத்வாவிலும் கொரோனா வைரஸ் பரிசோதனை நோன்பை முறிக்காது என்றே வழிகாட்டியுள்ளது.

முஹம்மத் பகீஹுத்தீன்

கருத்துகள்