ஆரிப் ஸேர் – தென்மாகாணத்தின் ஒரு தன்னிகரற்ற ஆளுமை.

தமது தனிப்பட்ட பொருளாதார முன்னேற்றங்கள், சமூக அந்தஸ்துக்கள், பதவியுயர்வுளுக்கான வாய்ப்புக்களைக் கூட தியாகம் செய்து சமூகத்தின் எழுச்சியினை மாத்திரம் குறிக்கோளாகக் கொண்டு செயற்படும் சமூக செயற்பாட்டாளர்களின், அவர்கள் மனித பலவீனத்தின் அடிப்படையில் விடும் தவறுகளை மாத்திரம் பூதாகரப்படுத்திப் பேசுவதும், அவர்கள் செய்த பணிகளை மெச்சிப் பாராட்டாமல் கஞ்சத்தனம் காட்டியும், அவர்கள் இறந்ததற்குப் பின்னாலேயே அவர்களைப் பற்றித் துதி பாடுகின்ற போக்குமே சமூகத்தில் பரவலகக் காணப்படுகின்றது, அவர்கள் வாழும் போதே வாழ்த்திப் பாராட்டுகின்ற போக்கு சமூகத்தில் கம்மியாகவே இருக்கின்றது. வாழும் போதே வாழ்த்தி ஊக்குவிக்கின்ற போக்கு நபிகளாரின் சுன்னாவுக்கு மாற்றமான ஒன்றல்ல. நபியவர்கள் நிறைய ஸஹாபாக்களை, ஏன் காட்டரபிகளைக் கூட பல்வேறு சந்தர்ப்பத்தில் வாழ்த்தி மெச்சிப் பேசி சுவர்க்கத்தினைக் கொண்டு நன்மாறாயம் கூறி அதனூடாக ஏனையவர்களையும் அவற்றின் பால் ஊக்குவித்த பல நூற்றுக்கணக்கான சந்தர்ப்பங்களை சீறாவில் காணலாம்.

அந்த வகையில் பலத்த சோதனைகளுக்கு மேல் சோதனைகளைச் சந்தித்தும் சளைக்காமல், துவண்டு போகாமல், இறைவனின் களா கத்ரில் குறை காணாமல், யாரிடமும் தனது தனிப்பட்ட தேவைளுக்கான உதவிகளை வாய் திறந்து கேட்காமல் தனது எழுபது வயதிற்குப் பிறகும் சமூகத்தின் உயர்ச்சியையே குறிக்கோளாகக் கொண்டு அல்லும் பகலும் தனது ஸ்கூட்டர் மோட்டார் சைக்கிளில் ஓடியாடித் திரியும் ஒரு மா மனிதரைப் பற்றித்தான் நான் இங்கு குறிப்பிட வந்துள்ளேன்.

ஆரிப் ஸேர் என்ற பெயர் தென்மாகாண முஸ்லிங்கள் மத்தியில் மிகவும் பரிச்சயமான பெயர். 1941ம் ஆண்டு மாத்தறையில் பிறந்த ஆரிப் ஸேர் தனது ஆரம்பக் கல்வியினை திக்குவல்ல மின்ஹாத் தேசிய பாடசாலையிலும், இடைநிலைக் கல்வியினை வெலிகம அரபா தேசிய பாடசாலையிலும் கற்ற பின்னர், 1961ம் ஆண்டு அட்டாளைச் சேனை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் ஆசிரியர் பயிற்சி பெற்ற பின்னர் பதுளை மாவட்டத்தில் இரண்டு வருடங்களும், கொழும்பு மாவட்டத்தில் சுமார் 25 வருடங்களும் ஆசிரியராக, அதிபராகக் கடமையாற்றிய பின்னர் கிந்தோட்டை ஸாஹிரா கல்லூரியின் அப்போதைய பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் செயலாளர் புர்கான் (B.Com) அவர்களின் அயராத முயற்சியின் காரணமாக 1989ம் ஆண்டு கிந்தோட்டை ஸஹிரா கல்லூரியின் அதிபராகக் கடமையேற்றார்.

கிந்தோட்டை ஸாஹிரா கல்லூரி வரலாற்றின் கல்வி மற்றும் வெளிக்கள செயற்பாடுகளில் ஒரு திருப்புமுனை ஆரிப் ஸேர் அவர்களுடைய காலத்தில் தான் ஏற்பட்டது என்பதனை யாராலும் மறுக்க முடியாது. முழு ஊருமே அதற்கு சாட்சி சொல்லும். மர்ஹூம் ஸத்தார் ஹாஜியார், மர்ஹூம் அன்வர் ஹாஜியார், புர்கான் (B.Com) போன்ற வசதி படைத்த, படித்த ஊர் முக்கியஸ்தர்கள் அனைவரையும் ஒரே மேசைக்குக் கொண்டு வந்து பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினை உறுதிப்படுத்தி அவர்களின் பெரும் பங்களிப்போடு கல்வித்துறையிலும், ஒழுக்கம் மற்றும் வெளிக்கள செயற்பாடுகளிலும் பெரும் பின்னடைவைச் சந்தித்திருந்த கிந்தோட்டையினையும், கிந்தோட்டை ஸாஹிரா கல்லூரியினையும் கல்வி எழுச்சியின் பால் கண் திறக்கச் செய்த ஒரே ஆளுமை ஆரிப் ஸேர் தான்.

பாடசாலையின் கல்வி எழுச்சியினை நோக்காகக் கொண்டு ஆரிப் ஸேர் அவர்கள் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் பங்களிப்போடு மேற்கொண்ட பல முன்னெடுப்புக்களில் சிலதை மாத்திரம் சுட்டிக் காட்டுகின்றேன்.

  1. இயக்க, அரசியல், ஊர் பேதங்களுக்கு அப்பால் ஊரின் வசதி படைத்த மற்றும் படைத்த முக்கியஸ்தர்கள் அனைவரையும் ஒரே பேச்சுவார்த்தை மேசைக்குக் கொண்டு வந்தமை மற்றும் உறுதியான பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினை உருவாக்கியமை.
  2. தமிழ் மொழியில் மொன்டிசூரி வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டமை.
  3. வீடு வீடாக மாணவர்களைக் குழுக்களாக அனுப்பி நூற்களை சேகரித்து நுல் நிலையம் உருவாக்கியமை.
  4. நாட்டின் முன்னணி கலைஞர்களை வரவலைத்து கவியரங்கு நிகழ்ச்சிகள் நடாத்தியமை.
  5. “அல்ஹிரா” என்ற சஞ்சிகையை முதன் முதலாக வெளியிட்டு ஊரில் சஞ்சிகைக் கலாச்சாரத்தினையும், வாசிப்புக் கலாச்சாரத்தினையும் ஊக்குவித்தமை.
  6. பாடசாலை வரலாற்றில் முதன் முதலாக மாபெரும் கல்விக் கண்காட்சி 1992ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டமை. இதில் இடம்பெற்ற “ஜிங்கங்கை செயற்றிட்ட மாதிரி” பேராதனை பல்கலைக்கழக 50ம் ஆண்டு நிறைவினை முன்னிட்டு நடாத்தப்பட்ட கண்காட்சிக்குத் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
  7. “மின்னும் தாரகை” எனும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மாணவர்களைப் பங்கு பெற வைத்தமை.
  8. பிரபல முன்னணிக் கலைஞர்களான அபுநானா – ஆரிபா நிகழ்ச்சியினை நடாத்தி முழு ஊரினையும் ஒன்று திரட்டியமை.
  9. தென்மாகாண முஸ்லிம் பாடசாலைகளுக்கிடையிலும், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தினாலும் நடாத்தப்பட்ட விவாதப் போட்டிகளுக்கு மாணவர்களைத் தயார்படுத்தி அனுப்பி வெற்றி பெற்றமை.
  10. ஆசிரியப் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யும் பொருட்டு 12 தொண்டர் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு அவர்களுக்கு இரண்டு வருடங்கள் தொடர்ச்சியாக கொடுப்பனவுகள் மேற்கொள்ளப்பட்டமை. அதில் 5 ஆசிரியர்களுக்கு ஆசிரியர் நியமனம் கிடைத்தமை.
  11. பாடசாலை பேன்ட் வாத்தியக்குழு உருவாக்கப்பட்டமை.
  12. மத்திய கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்டமை.
  13. 3ம் தரம் வரை படித்த இப்றாஹீமுக்கு அரச உத்தியோகம் கிடைக்க ஆவணம் செய்தமை.
  14. மூன்றாம் நிலைக் கல்வியோடு தொடர்பு பட்ட வயரிங், இலக்ரோனிக் வகுப்புக்களை நடாத்தியமை.

இவ்வாறு அடுக்கிக் கொண்டே போகலாம்.

1996ம் ஆண்டு வரை கா/ ஸாஹிராவில் அதிபராகப் பணியாற்றிய பின்னர் வெலிகம் அரபா தேசிய பாடசாலைக்கு இடமாற்றம் பெற்றுச் சென்று அங்கும் பல வருடங்கள் அதிபராகக் கடமையாற்றினார்.

கல்வித்துறையில் மாத்திரமின்றி பல்வேறு சமூக செயற்பாட்டு இயக்கங்களில் முக்கிய பதவிகளை வகித்து இன்று 75 வயதினைத் தாண்டிய நிலையிலும் முழு நேர சமூக செயற்பாட்டுப் பணிகளில் சளைக்காமல் ஈடுபட்டு வருகின்றார்.

  1. காலியில் பைத்துல் ஹிக்மா பெண்கள் அரபுக் கலாசாலையினை உருவாக்கும் பணிகளில் பெரும் பங்கெடுத்தது மாத்திரமின்றி அதில் 3 வருடங்கள் அதிபராகக் கடமை புரிந்துள்ளார்.
  2. கிந்தோட்டை பொல்துவ குடியிருப்புத் திட்ட செயலணியின் செயலாளராகவும் செயற்பட்டுள்ளார்.
  3. 2018ல் ஆரம்பிக்கப்பட்ட காலி மாவட்ட கல்வி சகாய நிதியத்தினை ஸ்தாபித்து அதன் செயலாளராக செயற்பட்டு வருகின்றார்.
  4. 2016 முதல் 2018ம் ஆண்டு வரை காலி வலய காதி நீதிபதியாகக் கடமை புரிந்துள்ளார். அக்கால கட்டத்தில் அவரால் ஸ்தாபிக்கப்பட்ட நல்லிணக்க சபைகள் இன்றளவும் செயற்பட்டு வருகின்றன.

ஆரிப் ஸேர் அவர்கள் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் குடும்ப ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பலத்த சோதனைகளுக்கு முகம் கொடுத்தவர். பலத்த இடிகள் தொடராக விழுவது போன்ற பாரிய சோதனைகளுக்கு முகம் கொடுத்தும் தளராமல், மனம் சளைக்காமல், இறைவனின் கலா கத்ரில் குறை காணாமலும் திடவுறுதியோடு இன்றளவும் தள்ளாடும் வயதிலும், பல நோய் நொம்பல்களோடு சமூகத்தின் கவலைகளை உள்ளத்தில் குவித்த வண்ணம் அல்லும் பகலும் தனது பழைய ஸ்கூட்டர் ரக மோட்டார் சைக்கிளில் சுற்றித் திரிந்த வண்ணம் சமூக செயற்பாட்டாளர்களின் வீடுகளை நாள் தோறும் தட்டி சமூக எண்ணக்கருக்களை விதைப்பார்.

அவருக்குப் பேரப் பிள்ளை வயதினில் இருக்கும் என்னை அடிக்கடி வீடு தேடி வருவார். சில நேரங்களில் நான் கூட சளிப்படைவதுண்டு. ஆனால் அவர் சளைக்க மாட்டார். கல்வி சார்ந்த எந்தவொரு நிகழ்ச்சியிலும், தான் அழைக்கப்படாவிட்டாலும், கௌரவம் பாராது அழையா விருந்தாளியாகக் கூட கலந்து கொள்வார். தனது வாழ்நாளிலேயே தனது மூத்த மகனான மர்ஹூம் அல்ஹாஜ் பைஸல் அவர்களை தனது கண் முன்னாலேயே வாகன விபத்தில் இழந்தார். நோய்வாய்ப்பட்ட மகளின் இறப்பினைத் தனது வாழ்நாளிலேயே கண்டார். தனது இன்னாரு மகன் ஒரு வாழ்நாள் நோயாளியாக அவதிப்பட்டுக்கொண்டிருப்பதனை நாள் தோரும் கண்ணால் கண்டு வருகின்றார். தனது மனைவி நோய்வாய்ப்பட்டு இறந்ததனை தனது வாழ்நாளில் கண்டார். மகனுடைய மருத்துவச் செலவுகளை ஈடு செய்ய பெருமளவில் திண்டாடுகின்றார். இப்படியான பலத்த சோதனைகள் மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும், யாரிடமும் தனது கஷ்டங்களை வாய் திறந்து சொல்லி உதவி கேட்க மாட்டார். அவ்வாறு கேட்பதற்கு சங்கடப்படுவார். உரிமையோடு ஷேர்ட் கொலரைப் பிடித்து உதவி கேட்பதற்குத் தகுதியானவர்கள் இருந்தும் கேட்க மாட்டார். பல சமூகம் சார் நிறுவனங்களை உருவாக்கி அதற்கான நிதிகளைத் திரட்டி அனுபவம் உள்ள என்னை அவர் அடிக்கடி சந்திப்பார். தொலைபேசியில் கதைப்பார். ஆனால், சமூகத்தின் கல்வி எழுச்சி பற்றிய கருத்துப் பரிமாறலை விட தனது தனிப்பட்ட தேவைகளை என்றும் கதைத்ததில்லை. ஒரேயொரு தடவை மாத்திரம் தனது இளைய மகன் பாஹிம் நோய் வாய்ப்பட்டு கடுமையாகக் கஷ்டப்படுவாக மாத்திரம் குறிப்பிட்டார்.

ஆரிப் ஸேர் அவர்களுடைய பொருளாதா நெருக்கடிகள் நீங்கி, அவருடைய சமூகப் பணிகள் மற்றும் கல்வித்துறை சார்ந்த எண்ணக்கருக்கள் சமூகத்தில் வேறூண்டி, நோய் நொடிகள் இன்றிஅவருடைய ஆயுள் நீடிக்க வல்ல அல்லாஹ்வைப் பிரார்த்திக்கின்றேன்.

எம்.கே.எம். றஸ்மி

President and Founder, Forum for Education & Ethical Development (FEED) – Gintota.

கருத்துகள்